Black Gold Movie Review: தங்கமான கதைக்கரு… திரைக்கதையில் கோட்டை விட்ட படம்!

Black Gold Movie Review: தங்கமான கதைக்கரு… திரைக்கதையில் கோட்டை விட்ட படம்!

தலைமுடிக்கும் இவ்வளவு பெரிய விலையா? வித்தியாசமான கதையுடன் வந்த Black Gold… ஆனால் ரசிகர்களைக் கவர்ந்ததா?

எம்.எம். ஸ்டுடியோஸ் சார்பில் மூர்த்தி தயாரித்து, ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் படம் Black Gold. வெற்றி, பிரியா லயா, லிவிங்ஸ்டன், அபிராமி வெங்கடாச்சலம், ஏ. வெங்கடேஷ், ராமர், அருள் டி. சங்கர், துளசி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தீரன் அருண்குமார் எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்த வாரம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று. காரணம், வழக்கமான தாதாக்கள், கடத்தல் கதைகளுக்கு நடுவில் தலைமுடி வியாபாரத்தையும் அதன் பின்னணியில் நடக்கும் மாஃபியாவையும் கதையாக எடுத்திருக்கிறார்கள். நல்ல ஐடியாதான்! படம் எப்படி இருக்கிறது?

தலைமுடி கடத்தல்… பல கோடி வியாபாரம்!

இரண்டு தாதாக்களான வெங்கடேஷ், அருள் சங்கர் இடையே கடத்தல், சரக்கு வியாபாரம், அடிமாட்டு விலைக்கு சொத்துக்களை வாங்குவது என்று ஏகப்பட்ட விஷயங்களில் பகை. இந்த இரண்டு தரப்பிடமும் காசு பார்த்துக்கொண்டிருக்கிறார் போலீஸ் அதிகாரியான மூர்த்தி.

வெங்கடேஷின் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்கிறார் லிவிங்ஸ்டன். இவருக்கு மனைவி, மகன் வெற்றி, மகள் என அழகான குடும்பம். கார் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வெற்றிக்கும் பிரியா லயாவுக்கும் காதல். ஆனால் பிரியாவின் அப்பாவுக்கு இந்தக் காதலில் விருப்பமில்லை.

ஒரு கட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனது அப்பாவை அடித்து அவமானப்படுத்த, பதிலுக்கு முகத்தை மூடிக்கொண்டு இன்ஸ்பெக்டரை அடித்து வெளுக்கிறார் வெற்றி.

இதற்கிடையில் காய்கறி விற்பனை செய்வது போல ஊருக்குள் நுழையும் ஒரு கும்பல், பெண்கள் தனியாக இருக்கும் வீடுகள், முதியவர்கள் மட்டும் இருக்கும் வீடுகளை நோட்டம் பார்த்து கொடூரமாகத் தாக்கிக் கொள்ளையடிக்கிறது.

இன்னொரு பக்கம் தலைமுடி வியாபாரத்தில் இருக்கும் லாபத்தைத் தெரிந்துகொள்ளும் வெங்கடேஷ், அந்தத் தொழிலில் இறங்குகிறார். அவருடைய போட்டி தாதாவும் அதில் களமிறங்குகிறார். காய்கறி விற்று கொள்ளையடிக்கும் கும்பலும் தலைமுடி சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வழிமறித்துக் கொள்ளையடிக்கிறது.

இந்த நிலையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தலைமுடி சரக்கை லாரியில் எடுத்துச் செல்லும் லிவிங்ஸ்டன் திடீரென காணாமல் போகிறார். அவர் சரக்கைக் கடத்திவிட்டதாக முதலாளி குற்றம் சாட்டுகிறார்.

ஆனால், தனது அப்பாவின் நேர்மையை நன்றாகத் தெரிந்த வெற்றி, அவரைத் தேடிக் கிளம்புகிறார். அப்பாவுக்கு என்ன ஆனது? தலைமுடி சரக்கு எங்கே போனது? என்பதுதான் மீதிக்கதை.

அட! தலைமுடியிலும் இவ்வளவு பெரிய மாஃபியாவா?

படத்தின் கதைக்கரு உண்மையிலேயே வித்தியாசமானது.

நம்ம ஊரில் கோவில்களுக்கு முடி காணிக்கை கொடுக்கும் பழக்கம் காலம் காலமாக இருக்கிறது. ஆரம்பத்தில் அந்த முடிகள் எல்லாம் குப்பை மாதிரிதான் கருதப்பட்டன. ஆனால் இன்று இயற்கையான தலைமுடிக்கு சர்வதேச சந்தையில் பெரிய மவுசு.

செயற்கை முடிகளைவிட இயற்கையான தலைமுடிக்கு இருக்கும் தரம், குறிப்பாக இந்தியப் பெண்களின் நீளமான கூந்தலுக்கு இருக்கும் வரவேற்பு, இதையெல்லாம் பயன்படுத்தி மிகப்பெரிய வியாபாரமே நடக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கி உள்ளூர் ஏஜெண்டுகள் வரை இந்த முடியைப் பிடிக்கப் போட்டி போடுகிறார்கள். அந்தப் போட்டி கடத்தல், அடிதடி, கொலை என்று போகும் அளவுக்கு இந்தத் தொழிலில் பணம் இருக்கிறது என்பதைப் படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

தங்கத்துக்காக நகைகளைப் பறிப்பது போல, எதிர்காலத்தில் தலைமுடிக்காகவே பெண்களின் கூந்தலை அறுக்கும் அளவுக்குக் குற்றங்கள் நடக்கலாம் என்ற விஷயத்தையும் முன்வைக்கிறார்கள்.

சும்மா சொல்லக்கூடாது… சினிமாவில் அதிகம் பேசப்படாத ஒரு விஷயத்தைத் தேடிப் பிடித்து கதையாக்கிய இயக்குநர் தீரன் அருண்குமாரைப் பாராட்டலாம். கொஞ்சம் அதீத கற்பனை போலத் தெரிந்தாலும், யோசிக்க வைக்கும் விஷயம்தான்.

இசையும் ஒளிப்பதிவும் பலம்!

கவாஸ்கர் அவினாஷின் பின்னணி இசை படத்துக்குப் பெரிய பலம். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் இசை நல்ல வேகம் கொடுக்கிறது. சபாஷ்!

சந்தோஷ் குமார் வீரசாமியின் ஒளிப்பதிவும் சிறப்பு. மெட்ரோ மகேஷ் அமைத்திருக்கும் சுருள் வாள் சண்டைக்காட்சி ரசிக்க வைக்கிறது.

வெற்றி வழக்கம்போல நடித்திருக்கிறார். பிரியா லயா அழகாக வலம் வருகிறார். நேர்மையான, உழைக்கும் எளிய அப்பாவாக லிவிங்ஸ்டன் கவனம் ஈர்க்கிறார்.

போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு தயாரிப்பாளர் மூர்த்தி பொருத்தமாக இருக்கிறார். காய்கறி விற்பனை என்ற போர்வையில் வீடுகளைக் கண்காணித்துக் கொள்ளையடிக்கும் கேரக்டரில் கராத்தே வெங்கடேசன் தனது தோற்றத்தாலேயே மிரட்டுகிறார்.

சுருள் வாளைச் சுழற்றும் காட்சியில் அருள் சங்கர் அழகாக ஸ்டெப் போடுகிறார்.

ஆனால் வெங்கடேஷ் நடிப்பில் மட்டும் ஏனோ செயற்கைத்தனம் அதிகம். வசன உச்சரிப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ‘ரதகஜ துரக பதாதிகள்’ என்பதற்குப் பதிலாக ‘துரதிபதிகள்’ என்று சொல்வதெல்லாம் கவனிக்க வேண்டிய விஷயம்.

நல்ல கதையை ஏன் இப்படி சொன்னீங்க சார்?

இவ்வளவு நல்ல கதைக்கரு இருந்தும், அதைச் சுவாரஸ்யமான திரைக்கதையாக மாற்றுவதில் இயக்குநர் கோட்டை விட்டிருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்திலிருந்தே காட்சிகளும் வசனங்களும் கொஞ்சம் செயற்கையாகவே இருக்கின்றன. தாதாக்கள் சண்டை, காதல், காய்கறி விற்று நடக்கும் கொள்ளை என்று ஒவ்வொன்றும் தனித்தனியாகப் போகின்றன. ஒன்றுக்கும் ஒன்றுக்கும் சரியான தொடர்பே இல்லை.

அருள் சங்கர் கதாபாத்திரம் இறந்துவிட்டது என்று சொல்லிவிட்டு, பிளாஷ்பேக்கில் அவர் வீரதீரமாகச் சண்டை போடுவதைக் காட்டுவதால் என்ன பயன்? அவர்தான் இறந்துவிட்டாரே! அதுவும் அந்தக் கதாபாத்திரத்துக்கு அப்படி ஒரு சண்டைக்காட்சி எதற்கு? வெற்றிதான் சுருள் வாள் வைத்து நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாரா என்ன?

அதுவும் ஒரு அயோக்கியத்தனமான கதாபாத்திரத்தின் மரணத்துக்கு சோகப்பாடல் வேறு!

இப்படிப் பல இடங்களில் காட்சிகள் ஒட்டாமலும், கதையின் ஓட்டத்துக்கு உதவாமலும் இருக்கின்றன. இதனால் படத்தொகுப்பும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

முக்கியமாக, தலைமுடி மாஃபியா என்ற வித்தியாசமான விஷயத்தை மையமாக வைத்து கதையை நகர்த்தியிருக்க வேண்டும். ஆனால் ஒரு கட்டத்தில் தலைமுடி வியாபாரம் ஓரமாகச் சுருண்டு படுத்துக்கொள்ள, வழக்கமான தாதாக்கள் மோதல், காதல், பாசம், பகை என்று படம் வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கிவிடுகிறது.

சரியான திரைக்கதை அமைப்பது அவ்வளவு சுலபமில்லைதான். ஆனால் நல்ல கதையைத் தேர்ந்தெடுத்த பிறகு அதைச் சரியாகச் சொல்ல வேண்டாமா சார்?

மொத்தத்தில்… Black Gold… Blocked Gold!

ஊட்டிக்குச் சுற்றுலா அழைத்துச் செல்வதாகச் சொல்லிவிட்டு, வீட்டுக்குள்ளேயே ஏ.சி அறையில் உட்கார வைத்து, “ஊட்டியும் இப்படித்தான் சில்லுன்னு இருக்கும்… என்ஜாய்… என்ஜாய்…” என்று சொன்னால் எப்படி இருக்கும்?

அப்படித்தான் இருக்கிறது இந்த Black Gold படமும்.

தங்கமாக மின்ன வேண்டிய கதைக்கரு, திரைக்கதையில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் மங்கிவிடுகிறது. வித்தியாசமான முயற்சிக்காக இயக்குநரைப் பாராட்டலாம். ஆனால் அதை முழுமையான சுவாரஸ்யமான படமாகக் கொடுக்கத் தவறியிருக்கிறார்.

மொத்தத்தில் Black Gold… Blocked Gold!

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *