
மேற்கத்திய பெயர்களையும், சைக்கலாஜிக்கல் த்ரில்லர் அம்சங்களையும் மட்டும் வைத்துக்கொண்டு ஒரு படத்தைச் சுவாரஸ்யமாக்கிவிட முடியாது. கதையின் மண்ணின் மணமும், திரைக்கதையின் அழுத்தமும், குறிப்பாக கிளைமாக்ஸின் தாக்கமும் மிக முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது ‘ஜான் டோ’.
இன்று வெளியாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe), இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ளது. சஞ்சனா நடராஜன், அனுபமா குமார், ஸ்ருஷ்டி சிங், படவா கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார்.
கேரளா – தமிழ்நாடு எல்லைப் பகுதியில் நடக்கும் மர்மமான கொலைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இதில் சந்துரு என்ற காவல்துறை அதிகாரியாக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார். காணாமல் போகும் குழந்தைகள், தொடர்ச்சியான கொலைகள், அடையாளம் தெரியாத நபர் எனப் பல மர்ம முடிச்சுகளுடன் விசாரணை தொடங்குகிறது. ஆனால், இந்த விசாரணை ஒரு கட்டத்தில் சந்துருவின் சொந்தக் கடந்தகாலத்துடனும் தொடர்புடையதாக மாறுகிறது.
மர்மமும் விசாரணையும்!
ஒரு சைக்கலாஜிக்கல் கிரைம் த்ரில்லருக்குத் தேவையான மர்மம், சந்தேகம், எதிர்பாராத திருப்பங்கள் எனப் பல விஷயங்களைத் திரைக்கதையில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார் இயக்குநர். குறிப்பாக, ஜான் டோ என்ற அடையாளம் தெரியாத நபரைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் மர்மம் கதையின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது.
அர்ஜுன் தாஸின் கம்பீரமான உடல்மொழியும், அவருக்கே உரிய குரலும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கின்றன. விசாரணையின் தீவிரத்தையும், கதாபாத்திரத்தின் மனநிலையையும் வெளிப்படுத்தும் வகையில் அவரது நடிப்பு அமைந்துள்ளது. மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஆனால், ஒரு நல்ல மர்மத் திரைப்படம் என்பது குற்றவாளி யார் என்ற கேள்வியை மட்டும் எழுப்புவதல்ல. அந்தக் கேள்விக்கான பதில் கிடைத்த பிறகு பார்வையாளர்களுக்குள் ஏற்பட வேண்டிய அதிர்ச்சியும், உணர்வுப்பூர்வமான தாக்கமும்தான் முக்கியம்.
நேட்டிவிட்டி எங்கே இயக்குநரே?
இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஒரு விஷயம் உறுத்தலாகத் தோன்றுகிறது. கதையின் பின்னணிக்கும், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கும் தேவையான உள்ளூர் வாழ்வியலை இன்னும் ஆழமாகக் கொண்டு சென்றிருக்கலாமே என்பதுதான் அது.
ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மனிதர்கள் எப்படி முடிவெடுப்பார்கள் என்பது அவரவர் பின்னணி, உறவுகள், மனநிலை, சூழல் எனப் பல விஷயங்களைப் பொறுத்தது. சில நேரங்களில் அருகில் இருப்பவரைக் காப்பாற்றுவதற்குத்தான் முதலில் மனம் துடிக்கும். அதுவும் சிலருக்கு மட்டுமே அப்படியொரு முடிவு சாத்தியமாகும்.
உதாரணமாக, நிக்கோலஸ் செவாலியரின் ஜெர்மன் நாட்டுப் பின்னணியில் வேண்டுமானால், மகன் இறந்தாலும் பரவாயில்லை என்று விட்டுவிட்டு மனைவியைக் காப்பாற்றும் முடிவை ஒருவர் எடுக்கலாம். ஆனால் அதே மனநிலையையும், முடிவையும் வேறொரு சமூகத்தின் கதாபாத்திரத்திடம் அப்படியே பொருத்திவிட முடியாது.
ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு குடும்பப் பின்னணி இருக்கிறது. மனிதர்களின் உணர்வுகளும், உறவுகளின் வெளிப்பாடுகளும் இடத்துக்கு இடம் மாறுபடும்.
அதைத்தான் நேட்டிவிட்டி என்கிறோம்.
இயக்குநரே, இந்த விஷயத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமே!
பெயர்கள் மட்டும் புதுமையாக இருந்தால் போதுமா?
ஜான் டோ, டயாஸ்டீமா, கோஸ்டிங் என மேற்கத்திய வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு கதாபாத்திரங்களுக்கும், சம்பவங்களுக்கும் பெயர் வைத்துவிடுவதால் மட்டும் ஒரு படம் தரமானதாகிவிடாது.
அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் அர்த்தமும், அவை கதைக்குள் ஏற்படுத்தும் தாக்கமும் முக்கியம். ஒரு மர்மத்தை உருவாக்குவது எளிது. ஆனால் அந்த மர்மத்துக்கான முடிவை நம்பும்படியாகவும், சுவாரஸ்யமாகவும் பார்வையாளர்களுக்குக் கொடுப்பதுதான் திரைக்கதையின் உண்மையான சவால்.
அந்தச் சவாலில்தான் ‘ஜான் டோ’ தடுமாறுகிறது.
கிளைமாக்ஸில் இவ்வளவு அவசரம் ஏன்?
ஒரு குற்றவாளி யார் என்பது தெரிந்துவிட்டால், அதன்பிறகுதான் ஒரு நல்ல கிரைம் த்ரில்லரின் உண்மையான ஆட்டம் தொடங்க வேண்டும்.
குற்றவாளி எப்படி இந்த நிலைக்கு வந்தார்? அதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன? அவர் செய்த குற்றங்களுக்கான பின்னணி என்ன? சம்பவங்களுக்குள் இருக்கும் தொடர்பு என்ன? இவற்றையெல்லாம் நிதானமாக, ஒன்றோடொன்று இணைத்து ஒரு வலுவான ஃபிளாஷ்பேக் மூலம் சொல்லியிருந்தால் கிளைமாக்ஸ் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
குறிப்பாக, பார்வையாளர்கள் எதிர்பார்க்காத ஒரு உண்மையை வெளிப்படுத்தி, அதுவரை பார்த்த காட்சிகளுக்கெல்லாம் புதிய அர்த்தம் கொடுக்கும் வகையில் கிளைமாக்ஸ் அமைந்திருந்தால், படம் வேறொரு உயரத்தைத் தொட்டிருக்கும்.
ஆனால், அப்படியொரு வாய்ப்பு இருந்தும் அதைச் சரியாகப் பயன்படுத்தாமல், சில விஷயங்களைத் தொங்கலில் விட்டுவிடுவது ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு மர்மத்தை உருவாக்கிவிட்டு, அதற்கான சரியான விடையைக் கொடுக்காமல் பார்வையாளர்களைத் தவிக்கவிடுவது புத்திசாலித்தனமான திரைக்கதை உத்தி அல்ல. அதற்குப் பின்னால் வலுவான காரணமும், தெளிவான பார்வையும் இருக்க வேண்டும்.
இல்லையென்றால் அது முழுமையடையாத திரைக்கதையாகவே தோன்றும்.
மொத்தத்தில்…
‘ஜான் டோ’ திரைப்படத்தில் ஒரு சுவாரஸ்யமான கிரைம் த்ரில்லருக்கான அடிப்படைகள் இருக்கின்றன. கதையின் மையக்கரு, மர்மமான விசாரணை, அர்ஜுன் தாஸின் நடிப்பு எனப் பாராட்டக்கூடிய அம்சங்கள் இருந்தாலும், திரைக்கதையின் சில தடுமாற்றங்களும் குறிப்பாக கிளைமாக்ஸில் ஏற்படும் ஏமாற்றமும் படத்தின் ஒட்டுமொத்த அனுபவத்தைப் பாதிக்கின்றன.
ஒரு நல்ல கதைக்கு ஆரம்பம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அதன் முடிவு. அந்த முடிவுதான் பார்வையாளர்களின் மனதில் படத்தை நீண்ட நாட்கள் தங்க வைக்கும்.
மொத்தத்தில், ஜான் டோ (John Doe) தனக்கான சரியான கிளைமாக்ஸை அடையாளம் காணாத காரணத்தால்… ஜே. டோ (J. Doe)!

