Movie Reviews

பத்தா திரைப்பட விமர்சனம்: சிரிப்பும் பதற்றமும் கலந்த வித்தியாசமான கேங்ஸ்டர் கதை!

விஜய் சேதுபதி – சாய் ப்ரித்வி ராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பத்தா’, ஒரு ரவுடிக்கும் பள்ளிச் சிறுவனுக்கும் இடையே நடக்கும் எதிர்பாராத சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம். காமெடி, எமோஷன், பதற்றம் என மூன்றையும் கலந்து ஒரு சின்ன கதையை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன்.

பத்தா – ஏரியாவே பயப்படும் ரவுடி!

ஏரியாவில் பெயர் சொன்னாலே எல்லாரும் பயப்படுற அளவுக்கு ஒரு முரட்டு கேங்ஸ்டராக இருக்கிறார் பத்தா (விஜய் சேதுபதி). இரக்கமே இல்லாமல் நடந்து கொள்கிறவர். சின்ன பசங்க முதல் பெரியவர்கள் வரை அவரை பார்த்தாலே ஒதுங்கிப் போகிறார்கள்.

அதே ஏரியாவில் வசிக்கும் பள்ளிச் சிறுவன் சபரிக்கும் (சாய் ப்ரித்வி ராஜ்) பத்தா என்றாலே பயம். பத்தாவைப் பற்றி அந்தப் பகுதி குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த மாதிரி பல கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கதைகளைக் கேட்டு வளர்ந்த சபரிக்கு, பத்தா என்றாலே ஒரு விதமான நடுக்கம்.

கோடை விடுமுறை நேரத்தில் யாருக்கும் தெரியாமல் பள்ளிக்குச் செல்கிறான் சபரி. தனக்குச் சொந்தமான விளையாட்டுப் பொருளை எடுக்கச் செல்லும் அவன், பள்ளி கழிவறையில் பத்தா இருப்பது தெரியாமல் கதவைப் பூட்டி விடுகிறான்.

அதன்பிறகுதான் பிரச்னையே ஆரம்பிக்கிறது.

திரும்பிப் போய் கதவைத் திறந்தால் பத்தா தன்னைக் கொன்றுவிடுவாரோ என்ற பயத்தில் சபரி நடுங்குகிறான். ஒருபுறம் வெளியே வர முடியாமல் பத்தா சிக்கியிருக்கிறார். இன்னொரு புறம் கதவைத் திறக்க முடியாமல் சபரி தவிக்கிறான்.

பத்தா எப்படி வெளியே வருகிறார்? சபரி என்ன செய்கிறான்? இந்த சம்பவத்துக்குப் பிறகு இருவருக்கும் இடையே என்ன நடக்கிறது? என்பதுதான் படத்தின் மையக்கதை.