ரசிகர்களிடம் சொன்ன முக்கிய அட்வைஸ்!
நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பில் மொபைல் பயன்பாடு, புத்தக வாசிப்பு, சமூகப் பணி குறித்து பேசிய சிவகார்த்திகேயன்!
சென்னை போரூர் அருகே சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் சந்திப்பு இன்று (அக்டோபர் 4) நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
சமீப காலமாக முன்னணி நடிகர்கள் தங்களது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது சிவகார்த்திகேயனும் தனது நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் நற்பணி இயக்கத்தை அடுத்தகட்டத்துக்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும், மக்களுக்கு என்ன மாதிரியான உதவிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து சிவகார்த்திகேயன் பேசியதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ரசிகர்கள் செய்து வரும் சமூகப் பணிகளையும் அவர் பாராட்டியுள்ளார்.
அதோடு, “மொபைல் போனை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கோங்க… நிறைய புத்தகங்களை வாங்கிப் படிங்க. உங்களுக்கு பிடித்த புத்தகங்கள், புரட்சிகரமான கதைகள் என படித்து அறிவை வளர்த்துக்கோங்க” என்று ரசிகர்களிடம் சிவகார்த்திகேயன் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஹீரோக்கள் ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கச் சொல்வது வழக்கம். ஆனால் சிவகார்த்திகேயன் மொபைல் பயன்பாட்டைக் குறைத்துவிட்டு புத்தகங்களைப் படிக்கச் சொன்னது தங்களுக்கு புதிதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், “மக்களுக்கு நல்லது செய்யணும். நம்மால முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்யணும். நம்மால் அண்ணனுக்கு எந்த கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது” என்றும் அவர் கூறியதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியல் என்ட்ரி பற்றி என்ன?
இந்த சந்திப்பைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அரசியல் வருகை குறித்தும் கேள்விகள் எழுந்தன. ஆனால், இப்போதைக்கு அரசியல் தொடர்பாக சிவகார்த்திகேயன் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நிர்வாகி கூறுகையில், “அண்ணன் இப்போதுதான் படிப்படியாக வளர்ந்து ஒரு மாஸ் ஹீரோவுக்கான இடத்துக்கு வந்திருக்கிறார். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். ஒருவேளை எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால், அவருடைய கொள்கை மற்றும் நோக்கங்களைப் பார்த்து ஆதரவு கொடுப்போம்” என்றார்.
சிவகார்த்திகேயன் தற்போது இரண்டு படங்களில் பிஸியாக இருப்பதாகவும், ஒரு படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மற்றொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருவதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
“நாங்கள் 13 வருடமாக அவருடன் இருக்கிறோம். அவர் என்ன முடிவு சொல்கிறாரோ, அதற்கு ஏற்ற மாதிரி நாங்கள் நடப்போம்” என சேலத்தைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில், இந்த சந்திப்பில் அரசியல் குறித்து எந்த புதிய அறிவிப்பும் இல்லை. அதே நேரத்தில், ரசிகர்களை சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட வைப்பது, மொபைல் பயன்பாட்டைக் குறைத்து புத்தக வாசிப்பை அதிகரிப்பது என சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள அட்வைஸ் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

